தாழிட்ட கதவு!!

 எத்தனை நாட்கள் நாம்

இந்தத் தாழிட்ட கதவுகளுக்கு

இருபுறமும் நின்று பேசிக்கொள்ளப் போகிறோம்!


என்றோ வாய்க்கும்

உன் ஸ்பரிசம் தொட்டு வந்த

மெல்லுணர்வும்,

இது என்றாவது உடைந்து விடும் என்ற

நம் நம்பிக்கையும்.


உறமேற்றுவதாய் எண்ணி

நான் இதைச் சுற்றி

பல அடுக்குகள் நிறுவிவிட்டேனோ,

அழகாக்கப் பல திரைகள் இட்டேனோ,

பொலிவூட்டப் பல விளக்குகள் ஏற்றினேனோ,

அதற்குள் நானே எங்கோ வெகு உள்ளே

புதைந்து விட்டேனோ!


அனைத்து கோபுரங்களும் மாளிகைகளும்

இந்தப் பூட்டிய கதவின் மேல்

கட்டப்பட்டதோ?


ஒருவேளை தாழிட்ட

இக்கதவுதான்

நம் உறவின் தூணோ?


என் கனவுகளும்—

அவைகளோடு சேர்ந்து வந்த நினைவுகளும்,

என் ம௫கும் வெட்கமும்,

வெற்று கர்வமும்,

என்னுள் மாறிமாறி தோன்றும்

என் பிம்பமும்,

அதற்குப் பின்னால் ஒளிந்து நிற்கும் நிழலும்,


அனைத்துமே

நாம் செதுக்கி வைத்த

இந்த அழகிய கதவுதானோ?


இது சாவியே இல்லாத பூட்டோ,

அலங்கரிக்கப்பட்ட சிறையோ!


உடைத்தெறிந்தால்

ஒன்றுமே இல்லாமல் போகலாம்;

இல்லையேல்

உன்னை வந்து சேரலாம்!



-- Deeply inspired by Gitanjali (Rabindranath Tagore).

Monday, January 26, 2026 at 9:09 AM

0 Comments to "தாழிட்ட கதவு!!"

Post a Comment