என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
இதை சொல்வதற்கு, நான் யாராகவும் இருக்க வேண்டியது இல்லை!.
யாராகவோ இருந்தே இதை எழுதுகிறேன்!
எனக்குப் பசிக்கிறது,
அதற்காய், பணம் ஈட்டுகிறேன்,
மறந்து போன என் பசியோடு!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
தொடர்ந்து வரும் உறவுகள்,
சுமந்து வந்த கனவுகள்,
வலிகளைத் தருகின்றன!
காயங்கள் தந்த வடுக்கள் தான்,
எனக்கான மருதாணி என்றானது!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்,
ஆயிரம் கேள்விகளை எழுப்பி விட்டு செல்கின்றன,
விடை தேடி அலையும் என் பயிற்சியும்,
கேள்விகளையே தொலைக்க முயலும் என் முயற்சியும்!
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
தேடிக் கிடைத்த மரியாதைக்குரிய நட்பு,
என்னை இன்னும் அழகாய் செப்பனிட்ட நட்பு,
ஏற்றமிகு எண்ணங்களை பகிர்த்து கொண்ட நட்பு,
அதையும் தொலைத்து விட்டு வந்த போதும்,
தனிமையில் கரைந்த போதும்....
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
இன்னும் தேடிக் கொண்டே இருக்கும் காதலையும்,
உன்னோடு வாழ்வதற்காய், சேர்த்து வைத்திருக்கும்,
என் திறக்கபடாத நாட்களும்,
தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் என் காதலும்!
என என்னுள் நானே, அகதியாய் உழன்று கொண்டிருந்தும்...
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
என்னுளே இருக்கும் இறையை மட்டும் நான் உணர்ந்து இருந்தால்,
நீங்கள் சந்தோசமாய் இருந்திருப்பீர்கள்!
என்னுள்ளே இருக்கும் மிருகத்தை மட்டும் நான் உணர்ந்து இருந்தால்,
நான் சந்தோசமாய் இருந்திருப்பேன்!
ஆனால், இரண்டையும் எழுப்பி விட்டு,
மோத விட்டு, எது ஜெயித்த போதும்,
அழுவது என்னவோ இந்த சாமான்ய மனிதப் பிறவி தான், என்றாலும்....
ஆதலால்,
அதனாலும்,
என் வாழ்க்கை, எனக்குப் பிடித்து இருக்கிறது,
ஆகையால்......
இந்த அழகியல் உணர்வை தந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது!

4 Comments to "அழகியல் வாழ்க்கை"