ஏதுமற்ற ஒரு நாள் முடிந்து விட்டது.
சக்கையாய் போனது பகல்,
அதன் சாற்றை எல்லாம் எடுத்து,
ஓர் புள்ளியாம் அதில் ஊற்றிக் கொண்டது .
கடந்து விட்ட அந்த பகலை,
இரவுத் தழுவலில்,
கம்பளி வெப்பத்தில் தான் வாழத் தவிக்கிறது மனது.
உறைந்து போய் கிடக்கும் அந்த இருளின் மர்மமும்,
இரைந்து இரைந்து, ஏதுமில்லாமல் போய் சொட்டிக் கொண்டிருக்கும் பகலின் அலறலும்,
என சக்கரமாய் நினைவலைகள் சுழல,
எதை பிடிக்க, எதை இழக்க.......
கெட்டியாய்ப் போன அந்த நொடிகளில் தான்,
பாவ மன்னிப்புக் கோரி,
தன் நேற்றைய பாவங்களை, இன்றைக்கு கழுவி வைக்கிறது மனது!
நாளைக்கான முன் ஏற்பாடாய்!!!
நினைவுச் சங்கிலி எங்கோ அறுந்து போக,
தேக்கி வைத்த அத்தனை ஆசைகளையும்,
சுமந்து வந்த அத்தனை கற்பனைகளையும்,
கனவுக் குளத்தில் கரைத்து,
விட்ட கோட்டைகளையும்,
தொலைத்த கிரீடத்தையும்,
மூழ்கித் திளைத்து, பிடித்து,
வெற்றிக் களிப்பில்,
போதையில், துயிலில் சாய்கிறது மூளை!
முடிந்து விட்டது ஒரு அத்தியாயம்!
இதோ அடுத்த நேற்று, இன்று, நாளை!

2 Comments to "நேற்று, இன்று, நாளை!"