கடந்து செல்லும் அத்தனையும்,
துளியும் பாதிக்காமல் பின் நகர்கிறது!
இருப்பினும்,
எதோடும் சேராமல், எதையும் சேர்த்துக் கொள்ளாமல்,
ஏனோ வாழ்க்கை மிக வேகமாக நகர்கிறது!
பொருளாதார தன்னிறைவு,
முழுமையான சுதந்திரம்,
உண்மையான உறவுகள்,
உரிமையோடு தோழமை,
இருப்பினும்,
ஏனோ வாழ்க்கை ஒரு வெறுமையோடு நகர்கிறது!
எட்ட முடியா கனி ,
எட்டி பறித்த போதும்,
கைக்கு வந்த மறு கணமே புளித்து போகிறது!
அடுத்த கிளை தேடுகிறது!
ஏனோ வாழ்க்கை, ஒரு சலிப்போடு நகர்கிறது!
சுகம், சோகம்
எதுவாயினும்,
ஒரு தனிமை இரவில் தேங்கவிட்டு,
ஏனோ, வாழ்க்கை, ஒரு நெருக்கடியில் நகர்கிறது!
காதல் முதல் கடவுள் வரை,
ஒரு பதில் இருப்பினும்,
தெரியாத ஒரு கேள்விக்கு,
ஏனோ, வாழ்க்கை விடைத் தேடி நகர்கிறது!
ஏதோ சொல்கிறது,
எங்கோ கேட்கிறது,
எதுவோ காத்துக் கிடக்கிறது,
ஏனோ, வாழ்க்கை, நேரமில்லாமல் நகர்கிறது!

2 Comments to "ஏனோ?"